கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 March 2019 4:00 AM IST (Updated: 9 March 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் சந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் நந்தகுமார், தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்லூரி ஆசிரியர் சங்கம் பிரியா, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சண்முகம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் நடராஜன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஜெயராமன், தியோடர்ராபின்சன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கண்காணிப்பாளர்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் களப்பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஆகியோருக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வி துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்கிட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் மத்திய அரசின் முடிவின் படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை பணி அமர்த்துவதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தேவராஜ் நன்றி கூறினார்.

Next Story