செங்கம் அருகே போலி டாக்டர்கள் 2 பேர் கைது
செங்கம் அருகே போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கம்,
செங்கம் அருகே குப்பநத்தம் பகுதியில் 2 பேர் தனித்தனியாக அவர்களது வீடுகளில் டாக்டருக்கு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது போலீஸ் குழுவுடன் சென்று அங்கு சோதனை நடத்தினார்.
அப்போது வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
தொடர்ந்து அவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மீண்டும் அவர்கள் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில் அந்த பகுதியை சேர்ந்த பூபாலன் (வயது 39), மூர்த்தி (38) ஆகியோர் மருத்துவப்படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது. மேலும் அவர்களது வீட்டில் ஆங்கில மருத்துவம் செய்வதற்கான பொருட்கள் இருந்தது.
இதையடுத்து பூபாலனையும், மூர்த்தியையும் போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில் பூபாலன் 10-ம் வகுப்பு படித்து உள்ளதும், மூர்த்தி 12-ம் வகுப்பு படித்து உள்ளதும் தெரிய வந்தது.
2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செங்கம் பகுதியில் ஏராளமான போலி டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story