நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பாடுபடுவோம் கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமி பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பாடுபடுவோம் கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமி பேட்டி
x
தினத்தந்தி 9 March 2019 4:45 AM IST (Updated: 9 March 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பாடுபடுவோம் என்று கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறினார்.

திருப்பூர்,

கொங்குநாடு முன்னேற்ற கழகம் மற்றும் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவையின் சார்பில் கொ.மு.க. நிறுவன தலைவர் பிறந்தநாள் விழா, கொங்கு விருதுகள் வழங்கும் விழா, கல்வி ஊக்கப்பரிசுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா திருப்பூர் சுப்பராயக்கவுண்டர் செல்லம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். தலைமை கழக செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். பொருளாளர் நேருநகர் நந்து தொடக்க உரையாற்றினார். கொங்குநாட்டில் சாதனை படைத்தவர்களுக்கு கொங்கு விருதுகள், பள்ளி மாணவ–மாணவிகளுக்கு கல்வி ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கு கட்சி நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள். முடிவில் மாநகர தலைவர் முத்துசாமி நன்றி கூறினார்.

பின்னர் பெஸ்ட் ராமசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும், 21 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தருவதாக முடிவு செய்துள்ளோம். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசும், மத்தியில் பா.ஜனதா அரசும் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும். கொங்கு நாட்டில் பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

குறிப்பாக அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை 2 ஆண்டுகளில் நிறைவு செய்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கொங்குநாடு முன்னேறுவதற்காக உழைக்கும் கட்சி அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் தான்.

கொங்குநாடு முன்னேறும் வகையில் ராணுவ தளவாட கருவிகள் தயாரிக்கும் மையத்தை கோவையில் தொடங்கியிருக்கிறார்கள். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சென்னை ஆவடியில் உள்ள ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் உலகத்தரம் வாய்ந்த ரெயில் பெட்டிகளை தயாரிக்க ஏற்பாடு செய்துள்ளனர். சிறிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தை புதிதாக கட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். புயலில் அழிந்து போன ராமேஸ்வரம்–தனுஷ்கோடி ரெயில் பாதை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியுள்ளனர். தர்மபுரி–மொரப்பூர் ரெயில் சேவை தொடங்குவதற்கான பணி செய்திருக்கிறார்கள்.

இந்த பகுதிக்கு நல்லது செய்பவர்களை ஆதரிப்பது என்று எங்கள் கட்சி முடிவெடுத்திருக்கிறது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற பாடுபடுவோம். வரும் காலத்தில் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர் பதவி எங்களுக்கு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.–தே.மு.தி.க. கூட்டணி எட்டப்படும் என்று நம்பிக்கை உள்ளது. அப்படி கூட்டணி ஏற்பட்டால் நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story