ஈரோடு மாவட்டத்தில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு


ஈரோடு மாவட்டத்தில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 9 March 2019 4:30 AM IST (Updated: 9 March 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு,

தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம், பவர் கிரீட் நிறுவனம் ஆகியவை தமிழகத்தில் ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைத்து வருகின்றன. உயர்மின் கோபுரங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் நசுக்கப்படுவதாகவும் கூறி இந்த திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும், மின் கோபுரங்களுக்கு பதிலாக தேசிய நெடுஞ்சாலையில் தரை வழியாக மின்சாரம் எடுத்துச்செல்லும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்படும் 13 மாவட்டங்களிலும் இந்த தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி பகுதியில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அப்போது பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல் மூலக்கரை பகுதியில் தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டங்கள் நடந்தன. இந்த எதிர்ப்புகளையும் மீறி உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே விவசாயிகள் தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், 13 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் வீடுகள் மற்றும் நிலங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்துவது என்று போராட்டக்குழு முடிவு செய்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு அருகே உள்ள மூலக்கரை பகுதியில் உயர் மின்கோபுரங்களால் பாதிக்கப்படும் 30 வீடுகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வீடுகளின் முன்பும், மாடியிலும் கருப்பு கொடிகள் கட்டினார்கள்.

இதுபோல் சென்னிமலை, முதலியாக்கவுண்டன்வலசு, பெருந்துறை ஆர்.எஸ்., வெள்ளோடு மேட்டுப்பாளையம், புதுப்பாளையம், வண்ணாங்காட்டுவலசு, எளையாக்கவுண்டன்பாளையம், கதிரம்பட்டி, நசியனூர் புதூர், நசியனூர் புதுப்பாளையம், வேட்டை பெரியாம்பாளையம், சாமிக்கவுண்டம்பாளையம், சித்தோடு, தயிர்பாளையம், பெரியபுலியூர், சின்னபுலியூர், வளையப்பாரபாளையம், ஜம்பை, பவானிபுதுப்பாளையம், கல்பாவி, குறிச்சி, குருவரெட்டியூர் என்று ஈரோடு மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்களால் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் முழுவதும் சுமார் 300 வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story