மணமேல்குடி அருகே, படம் பார்க்க செல்போன் கொடுக்காத மேற்பார்வையாளர் கொலை - பொக்லைன் டிரைவர்கள் 3 பேர் கைது


மணமேல்குடி அருகே, படம் பார்க்க செல்போன் கொடுக்காத மேற்பார்வையாளர் கொலை - பொக்லைன் டிரைவர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 March 2019 4:00 AM IST (Updated: 9 March 2019 3:38 AM IST)
t-max-icont-min-icon

மணமேல்குடி அருகே படம் பார்க்க செல்போனை கொடுக்காததால் மேற்பார்வையாளரை கொலை செய்த பொக்லைன் டிரைவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த மேலஸ்தானம் கண்மாயில் அரசு அனுமதியோடு சவுடு மணல் எடுக்கும் பணி பொக்லைன் எந்திரம் உதவியுடன் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் மேற்பார்வையாளராக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிமுத்து (வயது 21) பணியாற்றி வந்தார். பொக்லைன் எந்திரத்தின் டிரைவர்களாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த சின்னையா மகன் முத்துராஜா (25), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சிங்கனி மகன் பொன்னையா (19) மற்றும் ஒரு 18 வயது சிறுவன் ஆகியோர் வேலை பார்த்தனர்.

இவர்கள் 4 பேரும் மணமேல்குடி அருகே உள்ள நல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருந்து, வேலை பார்த்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்போனில் படம் பார்ப்பதற்காக இசக்கிமுத்துவின் செல்போனை முத்துராஜா, பொன்னையா மற்றும் சிறுவன் ஆகியோர் கேட்டதாகவும், அதற்கு இசக்கிமுத்து செல்போனை கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பொக்லைன் டிரைவர்கள் 3 பேரும் இசக்கி முத்துவை தாக்கினார்கள். பின்னர் பொக்லைன் எந்திரத்தை இயக்கி, எந்திரத்தின் கை போன்ற பகுதியால்(பக்கெட்), இசக்கிமுத்துவின் தலையில் அடித்தனர். இதில் படுகாயமடைந்த இசக்கிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இசக்கிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குப்பதிவு செய்து முத்துராஜா, பொன்னையா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story