விபத்தில் இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.25½ லட்சம் நஷ்டஈடு - தஞ்சை கோர்ட்டு உத்தரவு
விபத்தில் இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.25½ லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தஞ்சை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே அவுச்சிக்கோன்பட்டி கோட்டை தெருவில் வசித்து வந்தவர் முருகேசன்(வயது32). சமையல்காரர். இவர் கோவையில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி அதிகாலை பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தார். பழனி-உடுமலைப்பேட்டை சாலையில் சுக்கநாயக்கன்பட்டியில் சென்றபோது அந்த வழியாக வந்த தனியார் பஸ் முருகேசன் மீது மோதியது. இதில் பலத்தகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
தஞ்சை விளார்ரோடு காயிதேமில்லத் நகர் 3-வது தெருவில் வசித்து வந்தவர் மணிகண்டன்(33). இவர் தனியார் வங்கி கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ந் தேதி இவர் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்றார். சுந்தரபெருமாள்கோவில் சோழன்நகர் மெயின்ரோட்டில் சென்றபோது அந்த வழியாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காயம் அடைந்த மணிகண்டன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இந்த 2 விபத்திற்கு நஷ்டஈடு கேட்டு முருகேசன் மற்றும் மணிகண்டன் குடும்பத்தினர் தஞ்சை மாவட்ட முதன்மை கோர்ட்டு மற்றும் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி பூர்ணஜெய ஆனந்த் விசாரணை செய்து முருகேசன் குடும்பத்திற்கு ரூ.11 லட்சத்து 1,000 வழங்க நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தஞ்சை கிளை மேலாளருக்கும், மணிகண்டன் குடும்பத்திற்கு ரூ.14 லட்சத்து 58 ஆயிரம் வழங்க யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தஞ்சை மண்டல மேலாளருக்கும் உத்தரவு பிறப்பித்தார்.
Related Tags :
Next Story