ஜோலார்பேட்டையில் பரபரப்பு யஷ்வந்த்பூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ‘திடீர்’ தீ 3 மணி நேரம் தாமதம்


ஜோலார்பேட்டையில் பரபரப்பு யஷ்வந்த்பூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ‘திடீர்’ தீ 3 மணி நேரம் தாமதம்
x
தினத்தந்தி 9 March 2019 10:45 PM GMT (Updated: 9 March 2019 2:57 PM GMT)

யஷ்வந்த்பூரிலிருந்து வந்த ரெயிலின் சக்கரத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அந்த ரெயில் ஜோலார்பேட்டையில் நிறுத்தப்பட்டது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டபின் 3 மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் புறப்பட்டு சென்றது.

ஜோலார்பேட்டை, 

கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரிலிருந்து சென்னை நோக்கி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு புறப்பட்டது. நள்ளிரவு 1.30 மணிக்கு அந்த ரெயில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தின் 5–வது பிளாட்பாரத்துக்கு வந்து கொண்டிருந்தது. ரெயில் நிலையத்திற்குள் ரெயில் நுழையும்போதே, ரெயில்வே சிப்பந்திகள் ரெயில் சக்கரத்தில் ஏதாவது பழுது உள்ளதா? என மின்விளக்கு மூலம் சரி பார்ப்பது வழக்கம். இதற்காக ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இரு புறமும் ராட்சத மின்விளக்கு பொருத்தப்பட்டு சிப்பந்திகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் யஷ்வந்த்பூரிலிருந்து ரெயில் உள்ளே வந்து கொண்டிருந்தபோது எஸ்.10 பெட்டியின் ‘வீல்பேரிங்’கில் சிறிய தீப்பொறி ஏற்பட்டு புகை வந்து கொண்டிருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரெயில்வே சிப்பந்திகள் உடனடியாக என்ஜின் டிரைவர்களுக்கும், ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து அந்த ரெயில் 5–வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் தீவிபத்து ஏற்பட்ட எஸ்.10 பெட்டியை தனியாக கழற்றும் பணியில் ஈடுபட்டனர். அந்த பணி முடிந்தபின் மற்ற பெட்டிகளை இணைத்தனர்.

அதன் பிறகு அந்த ரெயில் அதிகாலை 4.35 மணிக்கு அதாவது 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அதே நேரத்தில் தீவிபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகளை மட்டும் இறக்கி அவர்கள் ஆலப்புழையிலிருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அமர வைத்து அனுப்பி வைக்கப்பட்டனர். சரியான நேரத்தில் தீ கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் ஜோலார்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story