14-ந் தேதி தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 42,348 பேர் எழுதுகின்றனர் 4 தேர்வு மட்டும் மதியம் நடக்கிறது


14-ந் தேதி தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 42,348 பேர் எழுதுகின்றனர் 4 தேர்வு மட்டும் மதியம் நடக்கிறது
x
தினத்தந்தி 9 March 2019 11:15 PM GMT (Updated: 9 March 2019 5:43 PM GMT)

கோவை மாவட்டத்தில் 14-ந் தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 42 ஆயிரத்து 348 பேர் எழுதுகின்றனர். இதில் 4 தேர்வு மட்டும் முதல்முறையாக மதியம் நடக்கிறது.

கோவை,

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை கோவை நகர கல்வி மாவட்டத்தில் 57 மையங்களில் 15,181 பேரும், 868 தனித்தேர்வர்கள் என மொத்தம் 16 ஆயிரத்து 49 பேரும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 35 மையங்களில் 6,304 பேரும், 235 தனித்தேர்வர்கள் என மொத்தம் 6,539 பேரும் எழுதுகின்றனர்.

எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்தில் 36 மையங்களில் 9,775 பேரும், 299 தனித்தேர்வர்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 74 பேரும், பேரூர் கல்வி மாவட்டத்தில் 29 மையங்களில் 9,438 பேரும், 248 தனித்தேர்வர்கள் என மொத்தம் 9,686 பேரும் எழுதுகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் மொத்தம் 157 தேர்வு மையங்களில் 1,650 தனித்தேர்வர்கள் உள்பட 42 ஆயிரத்து 348 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் முதல் தாள், தமிழ் 2-ம் தாள், ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் 2-ம் தாள் ஆகிய 4 தேர்வுகள் முதல் முறையாக மதியம் 2.15 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணி வரை நடக்கிறது. அதன்படி 14-ந் தேதி மதியம் தமிழ் முதல் தாள் தேர்வு, 18-ந் தேதி மதியம் தமிழ் 2-ம் தாள், 20-ந் தேதி மதியம் ஆங்கிலம் முதல் தாள், 22-ந் தேதி மதியம் ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வு நடக்கிறது. பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு காலையில் நடப்பதால் இந்த தேர்வுகள் மதியம் நடக்கிறது.

எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பிற்கான மற்ற தேர்வுகள் வழக்கம் போல் காலை 10.15 மணி முதல் மதியம் 12.45 மணி வரை நடக்கிறது. அதன்படி 23-ந் தேதி விருப்ப மொழி தேர்வு, 25-ந் தேதி கணிதம், 27-ந் தேதி அறிவியல், 29-ந் தேதி சமூக அறிவியல்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் 13 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த கட்டுக்காப்பு மையங்களில் இருந்து வழித்தட அதிகாரிகளின் கண்காணிப்பில் 14-ந் தேதி காலை வினாத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

துண்டு காகிதம் வைத்து எழுதுதல், காப்பியடித்தல் போன்ற முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், 300 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 4,000 பேர் ஈடுபட உள்ளனர்.

தேர்வு மையங்களில் மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக் கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுத்தேர்வு குறித்து ஏதேனும் குறைபாடு இருந்தால் மாணவ-மாணவிகள் புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து மையங்களிலும் புகார் பெட்டி வைக்கப்படுகிறது. இது தவிர புகார்களை தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களிடம் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story