ரேஷன்கடையில் காலாவதியான காபித்தூள் வினியோகம் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்


ரேஷன்கடையில் காலாவதியான காபித்தூள் வினியோகம் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 March 2019 3:30 AM IST (Updated: 10 March 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன்கடையில் காலாவதியான காபித்தூள் வினியோகம் செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் சுலைமான் தெருவில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் விற்பனையாளராக கருணாகரன் பணியாற்றி வருகிறார். இந்த கடையின் மூலம் 1,090 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. நேற்று இக்கடையில் பாமாயில் வழங்கப்பட்டது. அதனை அறிந்து ரேஷன் அட்டைதாரர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

அப்போது விற்பனையாளர் கருணாகரன் ரேஷன் அட்டைதாரர்களிடம், காபித்தூள் வாங்கினால் தான் பாமாயில் தரப்படும் என்றார். வேறு வழியில்லாமல் காபித்தூளுக்கும் சேர்த்து பணத்தை கொடுத்து, பாமாயிலை வாங்கி சென்றனர்.

பின்னர் வீட்டிற்கு வந்தவர்களில் சிலர் அந்த காபித்தூளை பிரித்து, காபி போட்டு குடித்தனர். சுவையில் மாற்றம் இருந்ததால் காபித்தூள் பாக்கெட்டை மீண்டும் எடுத்துப்பார்த்தபோது அந்த காபிதூள் 9 மாதங்களுக்கு முன்பே காலாவதியானது தெரியவந்தது. அதில் சிறு சிறு புழுக்களும் இருந்தன.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அந்த ரேஷன் கடையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் காஞ்சனா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, விற்பனையாளர் கருணாகரன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story