பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் உறுதி செய்யப்பட்ட பெண் என்ஜினீயர் பாலியல் பலாத்காரம் தொழில் அதிபர் மகனுக்கு வலைவீச்சு


பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் உறுதி செய்யப்பட்ட பெண் என்ஜினீயர் பாலியல் பலாத்காரம் தொழில் அதிபர் மகனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 March 2019 3:30 AM IST (Updated: 10 March 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் உறுதி செய்யப்பட்ட பெண் என்ஜினீயரை பாலியல் பலாத்காரம் செய்த தொழில் அதிபர் மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் 26 வயது பெண் என்ஜினீயர் ஒருவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். அவருக்கு தந்தை இல்லை.

இந்த நிலையில் அந்த பெண் என்ஜினீயர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

நான் என்ஜினீயரிங் முடித்து உள்ளேன். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமண தரகர் ஒருவர் மூலம் சென்னிமலை ஈங்கூர் ரோட்டை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் மகன் ரகு (வயது 28) என்பவரின் ஜாதகம் எங்களுக்கு வந்தது.

இதில் 2 பேரின் ஜாதகத்திலும் பொருத்தம் இருந்தது. இதைத்தொடர்ந்து எங்களுடைய வீட்டுக்கு, ரகுவின் பெற்றோர் வந்து என்னை பெண் பார்த்தனர். இரு வீட்டாருக்கும், மாப்பிள்ளை மற்றும் பெண்ணை பிடித்து விட்டது. இதனால் இரு வீட்டாரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். மேலும் திருமணம் நடத்த உறுதியும் செய்யப்பட்டது. ஆனால் திருமண மண்டபம் கிடைக்கவில்லை.

இரு வீட்டாரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து எனக்கு, ரகு புதிதாக செல்போன் வாங்கி கொடுத்தார். அந்த செல்போன் மூலம் நாங்கள் 2 பேரும் அடிக்கடி பேசினோம். இதனால் எங்கள் 2 பேருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. மேலும் என்னுடைய வீட்டுக்கு அவர் அடிக்கடி வந்து சென்றார். அதுமட்டுமின்றி நாங்கள் ‘காம்ப்ளக்ஸ்’ ஒன்று கட்டி வந்தோம். அதற்கு ரகு ஆலோசனைகள் வழங்கி உறுதுணையாக இருந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் ஒரு நாள் இரவு என்னுடைய வீட்டுக்கு வழக்கம்போல் ரகு வந்தார். அப்போது என்னுடைய தாய் வெளியூருக்கு சென்று விட்டார். இதனால் நான் மட்டும் தனியாக இருந்தேன்.

இந்த தனிமையை பயன்படுத்தி அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். நான் எவ்வளவோ மறுத்தும் அவர் விடவில்லை. திருமணம் ஆவதற்கு முன்பே இப்படி நடந்து விட்டதே என நான் கூறி அழுதேன். அப்போது அவர், என்னிடம் உயிர் உள்ளவரை நான் கைவிடமாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்தார். மேலும் இதை வெளியில் சொல்ல வேண்டாம் எனவும் என்னிடம் அவர் சத்தியம் வாங்கி கொண்டார்.

இந்த நிலையில் திருமணம் தள்ளிக்கொண்டே சென்றது. இதற்கிடையே நான் வாந்தி எடுத்தேன். இதனால் ரகுவை நான் வீட்டுக்கு வரச்சொல்லி இதுபற்றி கூறினேன். மேலும் மருத்துவ பரிசோதனை செய்தபோது நான் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் நான் மிகவும் பயந்து ரகுவிடம் கூறி கதறி அழுதேன். அப்போது ரகு, ‘நான் உன்னை எந்த சூழ்நிலையிலும் கைவிடமாட்டேன்,’ என சத்தியம் செய்து கொடுத்தார். மேலும் அவர் எனக்கு கருச்சிதைவு மாத்திரை வாங்கி கொடுத்தார். இதனால் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.

இதற்கிடையே இந்த விவரம் என்னுடைய உறவினர் ஒருவருக்கு தெரியவந்தது. உடனே அவர், இதுகுறித்து ரகுவின் பெற்றோர் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதன்காரணமாக என்னுடைய உறவினருக்கும், ரகுவின் பெற்றோருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி ரகுவின் பெற்றோர் என்னை மிகவும் தரக்குறைவாக பேசினர்.

அதுமட்டுமின்றி என்னுடைய வீட்டுக்கு வருவதை ரகு நிறுத்தி கொண்டார்.

இந்த நிலையில் வேறு வசதியான பெண்ணை ரகு திருமணம் செய்ய முடிவு செய்து அவருடைய வீட்டின் வாசல் முன்பு பந்தல் போடப்பட்டு உள்ளதாக எனக்கு தகவல் வந்தது. இதனால் என்னுடைய உறவினர்கள் மூலம் ரகுவின் பெற்றோரிடம் கேட்டபோது நல்ல முடிவை சொல்கிறோம் என கூறினர். ஆனால் ரகு மற்றும் அவருடைய பெற்றோர் கடந்த 6–ந் தேதி வீட்டை விட்டு வெளியூர் சென்றுவிட்டனர்.

எனது விருப்பத்துக்கு மாறாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து தாய்மை அடைய வைத்ததுடன், கருவை கலைத்து மன உளைச்சல் ஏற்படுத்திய ரகுவின் மீதும், என்னை தரக்குறைவாக பேசிய அவருடைய பெற்றோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட மகளிர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரகு மற்றும் அவருடைய பெற்றோரை தேடி வருகிறார்கள்.


Next Story