தோகைமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு


தோகைமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 March 2019 11:00 PM GMT (Updated: 9 March 2019 8:31 PM GMT)

தோகைமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தோகைமலை,

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கொசூர் ஊராட்சியில் உள்ள உப்பிலியபட்டி, கெட்டிசனம்பட்டி, குப்பாண்டியூர், வாழைக்கினம் ஆகிய கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதி பொதுமக்களுக்கு கொசூர் ஊராட்சி நிர்வாகம் சார்பாக உப்பிலியபட்டி மேற்கு தெருவில் போர்வல் அமைத்து மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் தற்போது வறட்சியின் காரணமாக போர்வலில் நீர்மட்டம் குறைந்ததால் மேற்கண்ட கிராமங்களில் கடந்த 2 மாதங்களாக போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கொசூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த உப்பிலியபட்டி மற்றும் குப்பாண்டியூர் பொது மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் வாழைக்கினம் பஸ்நிறுத்தம் முன்பு தோகைமலை-பாளையம் மெயின் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ், கொசூர் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் ஐயர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வராமல் மறியலை கைவிடமாட்டோம் என்று மறுத்து விட்டனர். இதனைத்தொடர்ந்து கிருஷ்ணராயபுரம் ஒன்றிய ஆணையர் (கிராமவளர்ச்சி) (பொறுப்பு) பிரபாகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பூங்கொடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் குடிநீர் தட்டுப்பாடுஇல்லாமல் உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் நேற்று காலை 7 மணி முதல் 10 மணி வரை 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story