விடுமுறை தினத்தையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் - தங்கும் விடுதிகளில் அறை கிடைக்காமல் அவதி


விடுமுறை தினத்தையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் - தங்கும் விடுதிகளில் அறை கிடைக்காமல் அவதி
x
தினத்தந்தி 10 March 2019 5:02 AM IST (Updated: 10 March 2019 5:02 AM IST)
t-max-icont-min-icon

விடுமுறை தினத்தையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தங்கும் விடுதிகளில் அறை கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் பகுதியில் வார விடுமுறை தினத்தை ஒட்டி நேற்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். இதனால் ஏரியிலிருந்து அப்சர்வேட்டரி செல்லும் சாலையில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த சாலை ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டது.

மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, பில்லர் ராக் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரியும், ஏரியைச் சுற்றியுள்ள சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

கொடைக்கானலில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகல் 12 மணியளவில் இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது. இரவு நேரத்தில் தங்குவதற்கு விடுதிகளில் அறைகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் சில விடுதிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அவர்கள் சிரமப்பட்டனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகளிடம் கேட்டபோது, சுமார் 250-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டதால் குறைந்த எண்ணிக்கையில் விடுதிகள் செயல்பட்டன. அதிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. எனவே கட்டண விவரம் குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். இதனை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். விடுதி அறை கிடைக்காமல் ஊருக்கு திரும்பி செல்கிறோம் என்றனர்.


Next Story