கன்னியாகுமரியில் நாளை மறுநாள் ராகுல்காந்தி பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்வர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் தத் பேட்டி
கன்னியாகுமரியில் நாளைமறுநாள்(புதன்கிழமை) நடைபெறும் ராகுல்காந்தி பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்வதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய்தத் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
இது குறித்து அவர் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழகம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட திட்டங்கள், சிறப்பு நிதிகள் தற்போது குஜராத்துக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தின் வளர்ச்சியில் பிரதமர் மோடி எந்த கவனமும் செலுத்தவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பா.ஜனதாவுக்கு எதிரான நிலையை எடுத்து இருந்தார். ஆனால் தற்போது அவரது பெயலால் ஆட்சி நடத்துகிறவர்கள் மோடிதான் எங்கள் டாடி என்கின்றனர்.
மோடி வலிமையான தலைவர். இதனால்தான் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து இருப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஊழல் வழக்குகளில் இருந்து அவர்களை பாதுகாப்பதால் மோடி வலிமையானவர் என்று கூறுகின்றனர். ஊழலை பாதுகாப்பதில்தான் மோடி வலிமையானவர். நாட்டை பாதுகாப்பதில் அல்ல. நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில்தான் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகம். அதிகமான பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்து உள்ளனர். தமிழகத்தை புறக்கணித்து அரசியல் கட்சிகளை மிரட்டி கூட்டணி வைத்து உள்ள மோடிக்கு ஓட்டா அல்லது மக்களோடு துணை நிற்கும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
பா.ஜனதா ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களே ஈடுபட்டு உள்ளனர்.
அ.தி.மு.க.வை சேர்ந்த தம்பிதுரை பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது அவருடைய சீட்டை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கூட்டணியை விமர்சிக்கிறார்.
ராகுல்காந்தி வருகிற 13-ந் தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாடு மக்கள் ராகுல்காந்தியுடன் உள்ளனர் என்பதை காண்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ராகுல்காந்தி வருகை தொடர்பான ஆயத்த கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத், மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுடலையாண்டி, ராணி வெங்கடேசன், மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story