நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு? வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு? வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி
x
தினத்தந்தி 11 March 2019 4:30 AM IST (Updated: 11 March 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்பது குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தில் வியாபாரிகள், தொழில் முனைவோர் சங்க வெள்ளி விழா நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கொட்டாரம் வந்தார். அப்போது, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை ராயப்பேட்டையில் வருகிற மே மாதம் 5-ந் தேதி நடக்கும் மாநில மாநாட்டில் வியாபாரிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து கட்சிகளிடம் கேட்டுள்ளோம்.

ஜி.எஸ்.டி. வரியால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 வரியாக உள்ளதை ஒரே வரியாக ஆக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் ஆதரவு எந்த கட்சிக்கு என்பதை ஆட்சிமன்ற குழு கூடி முடிவு செய்யும்.

ஆட்சியில் யார் அமர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி எங்களிடம் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம். அதே சமயம் சட்டசபை தேர்தலில் வணிகர்களுக்கு 2 தொகுதி ஒதுக்க வேண்டும். 60 வயதான வியாபாரிகளை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும். உணவு பாதுகாப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கன்னியாகுமரி சன்னதி தெருவில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்ட கடைகளை பார்வையிட்டார். அப்போது, பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும், இதுதொடர்பாக தேவசம்போர்டு அதிகாரிகளை சந்தித்து பேசப் போவதாக கூறினார்.

Next Story