மாவட்டத்தில் 1.72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
இளம்பிள்ளைவாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 533 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் 888 மையங்களிலும், 2 நகராட்சி பகுதியில் 63 மையங்களிலும் என மொத்தம் 951 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபாகர், அசோக்குமார் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், நகராட்சி ஆணையாளர் ரமேஷ், முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பணி நிமித்தமாக வெளியூரில் இருந்து வந்து தங்கி இருந்தவர்கள், மேம்பால பணியாளர்கள், பொம்மை விற்பனையாளர்கள், இலங்கை தமிழர்கள் ஆகியோர்களின் குழந்தைகளுக்கு நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இந்த சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 804 பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.