அனகாபுத்தூரில் துணிகரம்: என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் நகை திருட்டு
அனகாபுத்தூரில், என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
தாம்பரம்,
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், விநாயகா நகர், 6–வது தெருவில் வசித்து வருபவர் அலெக்ஸ் (வயது 45). என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது 5 வயது மகள் மதிவாணிக்கு உடல்நிலை சரிஇல்லாததால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அலெக்சும், அவருடைய மனைவியும் மருத்துவமனையில் தங்கி, மகளை கவனித்து வந்தனர்.
அலெக்ஸ் மட்டும் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 36 பவுன் தங்க நகைகள் திருட்டு போய் இருப்பது தெரிந்தது.
அலெக்ஸ் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச்சென்று உள்ளனர். இதுபற்றி சங்கர்நகர் போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு மர்மநபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.