வெளிநாட்டுக்கு படிக்க அனுப்புவதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் பணம் மோசடி செய்த 5 பேர் மீது வழக்கு
வெளிநாட்டுக்கு படிக்க அனுப்புவதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் பணம் மோசடி செய்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை
கோவை ஆவராம்பாளையம் ரோடு, மகளிர் பாலிடெக்னிக் அருகில் சர்வதேச சேவை மையம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் உள்ளது. இதை தங்கவேலு, சுப்பையன், சுரேந்திரன், மற்றொரு தங்கவேலு, மீனா ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தினர் பட்டதாரிகளை உயர் கல்வி படிக்க இத்தாலிக்கு அனுப்புவதாக அறிவித்து இருந்தனர்.
இதை அறிந்த கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் லீலா ஆண்டனி (22) என்பவர் கோவை வந்தார். அவர், அந்த அந்த நிறுவனத்தினரை அணுகி, உயர்கல்வி படிக்க வெளிநாடு செல்ல வேண்டும் என்று கூறினார். அதன்படி அவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி தனியார் நிறுவனத்தினர் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணம் கேட்டு உள்ளனர். அந்த பணத்தை லீலா ஆண்டனியும் கொடுத்து உள்ளார்.
ஆனால் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது பற்றி லீலாஆண்டனி கேட்ட போது வெளிநாட்டில் படிக்க அனுமதி கிடைத்து விட்டதாக கூறி போலியான அனுமதி ஆணையை தயாரித்து வழங்கினர். அப்போது மும்பையில் இதற்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறும் கூறியுள்ளனர். அதை நம்பி லீலா ஆண்டனி மும்பை சென்றார். அங்கு சென்ற போதுதான் அந்த நிறுவனத்தினர் ஏமாற்றியது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார், தனியார் நிறுவன நிர்வாகிகள் தங்கவேலு, சுப்பையன், சுரேந்திரன், மற்றொரு தங்கவேலு, மீனா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோல் மேலும் பலரிடம் மோசடி நடைபெற்று உள்ளதா? என்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story