கல்குடியில் ஜல்லிக்கட்டு; 8 பேர் காயம்


கல்குடியில் ஜல்லிக்கட்டு; 8 பேர் காயம்
x
தினத்தந்தி 10 March 2019 10:45 PM GMT (Updated: 10 March 2019 8:19 PM GMT)

கல்குடியில் நடந்த ஜல்லிக்கட்டில் 8 பேர் காயமடைந்தனர்.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கல்குடி கிராமம் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி முத்துமாரியம்மன் கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சிவகுமாரி ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 240 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திண்டுக்கல், தஞ்சை, திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து 672 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முடியதில் 8 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டில் விராலிமலை தாசில்தார் சதீஸ் சரவணகுமார், சமூகநல பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் வளர்மதி மற்றும் விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கல்குடி கிராமமக்கள் செய்திருந்தனர். 

Next Story