கன்னியாகுமரி படகுதுறையில் பயங்கர தீ விபத்து


கன்னியாகுமரி படகுதுறையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 10 March 2019 11:00 PM GMT (Updated: 10 March 2019 9:05 PM GMT)

கன்னியாகுமரியில் படகு துறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுதுறை அருகே வாவத்துறை கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையை தங்குதளமாக கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இந்த படகுதுறையில் பழுதடைந்த படகுகளை கடற்கரையில் மேடான பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் பழுதடைந்த படகுகளில் திடீரென தீப்பிடித்தது. அப்போது, அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் தீ படகுகளில் வேகமாக பரவ தொடங்கியது. அத்துடன், அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.

இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், காற்று பலமாக வீசியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இரண்டு நிலையத்தில் உள்ள தீயணைப்பு வீரர்களும் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், வாவத்துறையை சேர்ந்த சகாய ஆன்டனி, ஜெர்மான்ஸ், ரெம்ஜியூஸ், அருள்தாஸ், ருபால்டு, புதுகிராமத்தை சேர்ந்த ஆன்டோ சிபு, ஜெரால்டு, பெரியார் நகரை சேர்ந்த சில்வஸ்டருக்கு சொந்தமான 10 படகுகள் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story