அ.தி.மு.க. ஆலமரம் போன்றது, கூட்டணியில் உள்ளவர்கள் பழம் பறிக்கலாம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி


அ.தி.மு.க. ஆலமரம் போன்றது, கூட்டணியில் உள்ளவர்கள் பழம் பறிக்கலாம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 11 March 2019 4:30 AM IST (Updated: 11 March 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆலமரம் போன்றது, கூட்டணியில் உள்ளவர்கள் பழம் பறிக்கலாம் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

கமுதி,

கமுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:–

 உழைப்பவர்களுக்கு அ.தி.மு.க.வில் எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். அ.தி.மு.க.வை நம்பி யாரும் கெட்டதே கிடையாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க.கட்சி ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., கைகளில் பத்திரமாக உள்ளது. தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தனது உயிரையும் பொருட்படுத்தாமல் வளர்த்த கட்சி இது. கமுதி கோட்டைமேடு வெற்றியின் அடையாளம். தேர்தல் தேதி அறிவித்துள்ள நிலையில் இங்கிருந்து அறைகூவல் விடுக்கிறேன்.

வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தால் இந்த கூட்டணி பலமாகும்.

தீவிரவாதிகள் முகாம்களை அழித்து தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் மோடி தலைமையிலான பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்கும். இதில் துளிஅளவும் சந்தேகமில்லை. இந்த ஆட்சியில் அ.தி.மு.க.வை சேர்ந்த 10 எம்.பி.க்கள் அமைச்சரவையில் பங்கேற்று ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் நாடகமாடுகின்றன. மானங்கெட்டவன்தான் தி.மு.க.வுடன் கூட்டு சேர்வான் என கூறிய ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று அந்த கட்சியுடன் ஒரு சீட்டுக்காக கூட்டணி அமைத்து மானங்கெட்டவனாக மாறிவிட்டார்.

வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.–தி.மு.க.வுக்கு மட்டுமே இருமுனைபோட்டி. டி.டி.வி.தினகரன் இந்த தேர்தலோடு இருந்த சுவடு தெரியாமல் போய்விடுவார். அ.தி.மு.க. கூட்டணி வரும் தேர்தலில் வரலாறு படைக்கும். மற்ற கட்சிகளின் கூட்டணி தோல்வியால் கட்சி தலைவர்களோடு தகராறு ஏற்படும். அ.தி.மு.க. ஆலமரம் போன்றது, இதில் கூட்டணியில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பழம் பறிக்கலாம், சாப்பிடலாம். ஆனால் மரத்தை அழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story