பெரம்பலூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கலெக்டர் பேட்டி


பெரம்பலூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 11 March 2019 11:00 PM GMT (Updated: 11 March 2019 6:41 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கலெக்டர் சாந்தா கூறினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்பட அனைத்து குறைதீர்க்கும் கூட்ட நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் விதிமுறைகளை கண்காணித்திடும் பொருட்டு, பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தனித்தனியே 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2 தொகுதிகளிலும் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 73 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேர்தலை கண்காணிக்க நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், இரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியே 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்ட நிலையான கண்காணிப்பு குழுவால் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.8 லட்சத்து 44 ஆயிரத்து 490 பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், கைப்பற்றப்பட்ட தொகைக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில் பணம் திருப்பி வழங்கப்படும்.

மேலும், தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் 1800 425 2240 என்ற கட்டணமில்லா தொலைபேசி புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி, பாகம் எண், வாக்காளர் வரிசை எண் உள்ளிட்ட தகவல்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் உரிமம் பெற்று வைத்திருக்கும் துப்பாக்கிகள் திரும்ப பெறப் பட்டு வருகிறது. இதில் பறிமுதல் செய்யப்படாத 22 துப்பாக்கிகள் நாளைக்குள் (அதாவது இன்று) திரும்ப பெறப்படும் என்றார்.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை அமைதியாகவும், சுமூகமாவும் நடத்திட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன், கலெக்டர் சாந்தா ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது கலெக்டர் சாந்தா கூறுகையில், ‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது வாகனங்களில் கட்சிக்கொடிகளை அகற்றிட வேண்டும். தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சியினர் மீது போலீசார் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக ஊர்வலம் மற்றும் வாகன அனுமதி பெற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பித்து, அனுமதி கடிதங்களை பெறலாம். இதில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பிரசார அனுமதி வழங்கப்படும். தேர்தல் பிரசாரங்களுக்காக அரசியல் கட்சியினர் தனியார் இடங்களில் கட்சி அலுவலகங்களை அமைப்பதற்கும் உரிய அனுமதி பெற வேண்டும்’ என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மற்றும் தாசில்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story