விசைத்தறி உரிமையாளர்களுக்கு கடன் வழங்கியதில் ரூ.9.8 கோடி மோசடி - சி.பி.ஐ. கோர்ட்டில் வங்கி அதிகாரிகள் உள்பட 60 பேர் ஆஜர்
விசைத்தறி உரிமையாளர்களுக்கு கடன் வழங்கியதில் ரூ.9.8 கோடி மோசடி நடைபெற்றது. இந்த வழக்கில் வங்கி அதிகாரிகள் உள்பட 60 பேர் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.
கோவை,
கோவை சோமனூர் பகுதியில் உள்ள சில விசைத்தறி உரிமையாளர்களுக்கு, சாமளாபுரத்தில் உள்ள கனரா வங்கியில் விசைத்தறி எந்திரங்கள் வாங்க கடன் வழங்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. வங்கி அதிகாரிகள் உள்பட பலருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், விசைத்தறியில் ஏற்கனவே உள்ள எந்திரங்களை காண்பித்து, புதிய எந்திரங்களை வாங்கியதாக கணக்கு காண்பித்து இருப்பதாகவும், ரூ.4 லட்சம் கடன் வாங்கியவர்கள் மீது, ரூ.10 லட்சம் கடன் பெற்று இருப்பதாக வங்கியில் கணக்கு எழுதி வைத்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மொத்தம் ரூ.9.8 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்று இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கடன் வாங்கிய 110 பேரில் 50 பேர் கடன் தொகையை செலுத்திவிட்டனர்.
கடன் தொகையை திரும்ப செலுத்தாதவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்பட 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு விசாரணை கோவை சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்தபோது வங்கி அதிகாரி ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள், விசைத்தறி உரிமையாளர்கள், கடன் வாங்கி கொடுத்த புரோக்கர்கள் உள்பட 60 பேர் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி (பொறுப்பு) குணசேகரன் அடுத்த மாதம் 1-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story