பெண் வார்டர் தற்கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த தம்பதி கோர்ட்டில் சரண் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு


பெண் வார்டர் தற்கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த தம்பதி கோர்ட்டில் சரண் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 11 March 2019 11:15 PM GMT (Updated: 11 March 2019 6:46 PM GMT)

திருச்சி சிறை பெண் வார்டர் தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தம்பதி கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

திருச்சி,

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்பன். இவரது மகள் செந்தமிழ்செல்வி(வயது 23). இவர் திருச்சி பெண்கள் சிறையில் வார்டராக பணியாற்றி வந்தார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர்கள் குடியிருப்பில் தங்கி பணிக்கு சென்று வந்தார். அதே வளாகத்தில் தங்கியிருந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வெற்றிவேல்(25) திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி வந்தார்.

வெற்றிவேலுக்கும், செந்தமிழ்செல்விக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு வெற்றிவேலின் அண்ணனும், வார்டருமான கைலாசமும்(27), அண்ணியும் பெண்கள் சிறை வார்டரான ராஜசுந்தரியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் வெற்றிவேலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமானது. இதனால் மனவேதனை அடைந்த செந்தமிழ்செல்வி கடந்த மாதம் 3-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி கே.கே.நகர் போலீசார் வெற்றிவேல், அவரது அண்ணன் கைலாசம், அண்ணி ராஜசுந்தரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் வெற்றிவேல் கைது செய்யப்பட்டு லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். செந்தமிழ்செல்வி தற்கொலை சம்பவத்திற்கு பிறகு கைலாசம், அவரது மனைவி ராஜசுந்தரி ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் 2 பேரும் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். 2 பேரையும் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையில் இந்த வழக்கு திருச்சியில் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் வெற்றிவேல் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு தற்கொலை செய்த செந்தமிழ்செல்வியின் தந்தை செல்லப்பன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த கைலாசமும், அவரது மனைவி ராஜசுந்தரியும் திருச்சி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர்.

அப்போது அவர்கள் ஜாமீன் கோரினர். இதற்கு செல்லப்பன் தரப்பில் வக்கீல்கள் திருமேணி, மார்ட்டின் மற்றும் சசி மனித உரிமை செயல்பாட்டு மையம் சார்பில் கோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கில் 2 பேரையும் வெளியே விட்டால் ஆவணங்கள் அழிக்கப்படும் எனவும், சாட்சியங்கள் கலைக்கப்படலாம் என்றும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கைலாசம் மற்றும் ராஜசுந்தரியை வருகிற 25-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

கைலாசம் ஏற்கனவே திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி வருவதால், அவரை துறையூர் கிளை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர். இதேபோல் ராஜசுந்தரி திருச்சி பெண்கள் சிறையில் வார்டராக பணியாற்றி வருவதால் அவரை திருவாரூர் மத்திய சிறையில் அடைக்க போலீசார் வேனில் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த வழக்கு வருகிற 25-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கைலாசம், ராஜசுந்தரி ஆகியோர் மீது சிறைத்துறை அதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது. 

Next Story