தூய்மையான குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


தூய்மையான குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 March 2019 4:15 AM IST (Updated: 12 March 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

தூய்மையான குடிநீர் கேட்டு குரும்பாபாளையம் கிராம பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்ற நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெறவில்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தான் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மனுக்களை போடுவதற்கு பெட்டி ஒன்று கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கிராமப்புற மக்களிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது பற்றி சரிவர தெரியவில்லை.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை என்பதால் வழக்கம்போல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்று கருதி கலெக்டரிடம் மனு கொடுக்க பலர் வந்தனர். இதில் ஆலத்தூர் தாலுகா குரும்பாபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தூய்மையான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களையும், கலங்களான தண்ணீரை ஒரு கேனிலும் எடுத்து வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்வது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலஉசேன் நகரம் கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்து முறையான குழாய்கள் அமைக்கப்படாததால் அந்த குடிநீரும் வருவதில்லை. இதனால் நாங்கள் குரும்பாபாளையம் காட்டு பகுதியில் உள்ள ஏரியின் தண்ணீரை தான் குடிநீருக்காக பயன்படுத்தி வருகிறோம். அந்த தண்ணீர் தூசி படர்ந்து, கலங்களாக உள்ளதால், அதனை குடித்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே எங்கள் பகுதியில் தூய்மையான குடிநீர் வினியோகம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் வருகிற 18-ந் தேதி போராட்டம் நடத்துவோம் என்றனர். இதுகுறித்து தகவலறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், மனுவினை பெட்டியில் போட்டு விட்டு செல்லுமாறும், உங்கள் பகுதிக்கு ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தூய்மையான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் முற்றுகையை கைவிட்டு, மனுவினை பெட்டியில் போட்டு விட்டு சென்றனர். இதேபோல் பெரம்பலூர் தாலுகா அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த முஸ்லிம்தெரு, கோணார்தெரு ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி மனு கொடுக்க, அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்திருந்தனர். அவர்களும் மனுவினை பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.

Next Story