மாவட்டம் முழுவதும் 120 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை கலெக்டர் உமா மகேஸ்வரி பேட்டி


மாவட்டம் முழுவதும் 120 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை கலெக்டர் உமா மகேஸ்வரி பேட்டி
x
தினத்தந்தி 11 March 2019 11:00 PM GMT (Updated: 11 March 2019 7:18 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரிகள் ராமசாமி, பரமேஸ்வரி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 நாடாளுமன்ற தொகுதிகள் வருவதால் பொதுக்கூட்டம், அரசியல் கட்சி தலைவர்களும் வரும்போது அவர்கள் பிரசாரத்திற்காக முறையாக அனுமதி பெறுவதற்கு புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டையில் உள்ளவர்கள் திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியிடமும், அறந்தாங்கியில் அனுமதி பெறுவதற்கு ராமநாத புரம் செல்ல வேண்டும். இதேபோல விராலிமலையில் அனுமதி பெறுவதற்கு கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் எங்களுக்கு பலவித சிரமங்கள் ஏற்படுகின்றன. நாங்கள் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். இதனால் ஒற்றைச்சாளர முறையில் மாவட்ட நிர்வாகத்திடம் நாங்கள் அனுமதி கடிதத்தை கொடுத்து விட்டு மாவட்ட நிர்வாகமே அந்தந்த தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்று தர வேண்டும் என கூறினர்.

தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் நேற்று (நேற்று முன்தினம்) முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளதால் பறக்கும் படையினர் மூலம் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்படும். இவ்வாறு நடத்தப்படும் சோதனைகள் முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுவதுடன், இதுபோன்று கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு முழுவதுமாக கண்காணிக்கப்படும். உரிய ஆவணங்கள் இல்லாமல் பணமோ, பொருட்களை கொண்டு செல்லக் கூடாது. அப்படி கொண்டு செல்லப்பட்டால் பறக்கும் படையினர் அதை பறிமுதல் செய்வார்கள்.

மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் சாதி, இனம், மதம், மொழி ஆகியவற்றிற்கிடையே வெறுப்பை தூண்டுகிற செயலில் ஈடுபட கூடாது. மேலும் ஒரு தனிப்பட்ட நபருக்கு சொந்தமான இடம், கட்டிடம், சுற்றுச்சுவர் போன்றவற்றில் அவரது அனுமதி இல்லாமல் எவ்வித விளம்பரமும் செய்ய கூடாது. பொது கூட்டங்களில் ஒலி பெருக்கி பயன்படுத்துவதற்கு முன் அனுமதி பெறுவதுடன், காலை 6 மணிக்கு முன்பும், இரவு 10 மணிக்கு பின்பும் ஒலி பெருக்கிகளை கட்டாயம் பயன்படுத்த கூடாது. அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து தேர்தல் நியாயமாக நடைபெற ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு ஆயிரத்து 537 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 120 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிப்பதற்கு 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அரசியல் கட்சிகள் கூறிய கோரிக்கை தொடர்பாக 4 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் அதிகாரியிடம், அனுமதி பெறுவதற்கு புதுக்கோட்டை கலெக் டர் அலுவலகத்திலேயே அதிகாரிகள் மனுக்களை பெற்று, அனுமதி பெற்றுத்தருவதற்கு தலைமை தேர்தல் அதிகாரியிடம் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கடந்த ஆண்டுகளில் தேர்தல் நடந்தபோது பறக்கும் படையினர் எடுத்த வீடியோ மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மட்டுமே வழங்கப்படும். ஆனால் இந்த தேர்தல் முதல் பறக்கும்படையினர் எடுத்த வீடியோக்களை அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, பொதுமக்களும் ரூ.300 செலுத்தி ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை வீடியோக்களாக பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story