அரசு அறிவித்ததை விட குறைவாக வழங்கியதாக நிவாரண பொருட்களுடன், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள்


அரசு அறிவித்ததை விட குறைவாக வழங்கியதாக நிவாரண பொருட்களுடன், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 11 March 2019 11:00 PM GMT (Updated: 11 March 2019 8:34 PM GMT)

அரசு அறிவித்ததை விட குறைவாக வழங்கியதாக கூறி நிவாரண பொருட் களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வந்தனர். மேலும் நிவாரணம் வழங்கக்கோரி உண்ணாவிரதம் இருக்க வந்தவராலும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் சதா.சிவக்குமார் தலைமையில் மகளிரணி செயலாளர் லோகம்பாள் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களுடன் வந்தனர்.

ஆனால் தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அங்கு வைத்திருந்த பெட்டியில் போட்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

பட்டுக்கோட்டை ஆதிதிராவிடர் தெருவில் நாங்கள் வசித்து வருகிறோம். கஜா புயலின் போது நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். வீடு, உடைமைகள் உள்ளிட்டவைகள் சேதம் அடைந்தன. இந்த நிலையில் அரசு அறிவித்த 27 வகையான நிவாரண பொருட்கள் 76 குடும்பத்திற்கு வழங்கப்படவில்லை.

பல போராட்டங்களுக்கு பின்னர், 27 பொருட்கள் வழங்காமல் குறைவான எண்ணிக்கையில் பொருட்கள் வழங்கப்பட்டன. பின்தங்கிய சமூகம் என்பதால் எங்களை அரசு வஞ்சிக்கிறது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிவாரண பொருட்கள் எங்கே போனது என தெரியவில்லை. எனவே நிவாரண பொருட்களை ஒப்படைப்பதற்காக அதனை எடுத்து வந்தோம். தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் நாங்கள் மனுவை பெட்டியில் போட்டு விட்டு செல்கிறோம். மேலும் அரசு அறிவித்த நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரணத்தொகையை எங்கள் பகுதியை சேர்ந்த 76 குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக மக்கள் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தங்க.குமரவேல், தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்பதற்காக வந்தார். ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததோடு, மனுவை எழுதி பெட்டியில் போட்டு விட்டு செல்லுமாறு கூறினர். இதையடுத்து அவர் மனுவை எழுதி அங்கு வைத்திருந்த பெட்டியில் போட்டு விட்டு சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தங்க.குமரவேல் கூறுகையில், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. சிறு, மற்றும் குறு தென்னை விவசாயிகள் பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் அவர்களுக்கு நிவாரணம் முறையாக கிடைக்கவில்லை. எனவே அரசு தலையிட்டு நேர்மையான வெளிப்படையான விசாரணை நடத்தக்கோரியும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.

Next Story