ரெயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு


ரெயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 12 March 2019 4:15 AM IST (Updated: 12 March 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று ஆண் ஒருவரது உடல் துண்டு துண்டாக கிடந்தது. தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் கிடந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தண்டவாளத்தில் பிணமாக கிடந்தது அங்குள்ள செங்கல்சூளையில் வேலை பார்த்து வந்த முன்னா சர்தார் (வயது 28) என்பது தெரிய வந்தது. அவர், மேற்குவங்காளம், நாடியா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

போலீசார் நடத்திய விசாரணையில், முன்னா சர்தார், ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தங்கி இருந்து வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு முன்னா சர்தார் மது போதையில் ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் பேசியுள்ளார். அவரை சக தொழிலாளர்கள் எச்சரித்து அப்புறப்படுத்தினர்.ஆனாலும் அவர் மீண்டும் தண்டவாளத்தில் அமர்ந்துள்ளார். தொடர்ந்து போதையில் தண்டவாளத்திலேயே படுத்து தூங்கியதாக தெரிகிறது. நேற்று அதிகாலையில் அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்துள்ளதும் தெரிய வந்தது.

இறந்த முன்னா சர்தாருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். அவர்கள் மேற்குவங்காளத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story