சிவகிரி அருகே, தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி தவறி விழுந்து சாவு - கயிறு அறுந்ததால் விபரீதம்


சிவகிரி அருகே, தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி தவறி விழுந்து சாவு - கயிறு அறுந்ததால் விபரீதம்
x
தினத்தந்தி 11 March 2019 11:00 PM GMT (Updated: 11 March 2019 10:11 PM GMT)

சிவகிரி அருகே தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி கயிறு அறுந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

சிவகிரி,

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் மணி (வயது 33). அவருடைய மனைவி செல்வி (33). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மணி ஈரோடு மாவட்டம் சிவகிரி இளங்கோ தெருவில் தங்கியிருந்து தென்னை மரம் ஏறும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மனைவி தாரமங்கலத்தில் வசித்து வருகிறார்.

மணி நேற்று சிவகிரி அருகே மாரப்பன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில் தென்னை மரம் ஏறுவதற்காக சென்றார். அங்கு அவர் தனது இடுப்பில் கயிறு கட்டியபடி மரத்தில் ஏறினார். பின்னர் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டார். அவருடன் தொழிலாளர்கள் சிலரும் மற்ற தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இடுப்பில் கட்டப்பட்டிருந்த கயிறு திடீரென அறுந்தது. இதனால் நிலைதடுமாறிய மணி மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்த தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி அறிந்ததும் மணியின் மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் சிவகிரி விரைந்தனர். அவர்கள் மணியின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story