திருவண்ணாமலை: ஏப்ரல் 18-ந் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதால் வாக்குப்பதிவு பாதிக்க வாய்ப்பு - தேர்தல் தேதி மாற்றப்படுமா? என கட்சியினர் எதிர்பார்ப்பு


திருவண்ணாமலை: ஏப்ரல் 18-ந் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதால் வாக்குப்பதிவு பாதிக்க வாய்ப்பு - தேர்தல் தேதி மாற்றப்படுமா? என கட்சியினர் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 11 March 2019 11:02 PM GMT (Updated: 11 March 2019 11:02 PM GMT)

திருவண்ணாமலையில் ஏப்ரல் 18-ந் தேதி சித்ரா பவுர்ணமி வருவதால் கிரிவலத்துக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திரள உள்ளனர். அன்று தேர்தல் நடந்தால் வாக்குப்பதிவு பாதிக்கப்படலாம் என அரசியல் கட்சியினர் கருதுகின்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறும். இதில் கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை விழாவும், சித்திரை மாதத்தில் வரும் சித்திரை வசந்த உற்சவமும் முக்கிய விழாக்களாகும். சித்திரை வசந்த உற்சவத்தின் நிறைவு நாளில் வரும் சித்ரா பவுர்ணமியன்று தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

சித்ரா பவுர்ணமி அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி வருகிறது. அன்று இரவு 7.05 மணிக்கு சித்ரா பவுர்ணமி தொடங்கி மறுநாள் 19-ந் தேதி மாலை 5.35 மணிக்கு நிறைவடைகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவித்து உள்ளது. அந்த நாள் சித்ரா பவுர்ணமி தினமாகும். அன்றைய தினம் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் நிலையில் வாக்குப்பதிவு பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.

அதே நாளில்தான் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்வார்கள். இதனால் திருவண்ணாமலைக்கு வரும் 9 சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

இது குறித்து பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கூறுகையில், “சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதால் வாக்குப்பதிவு முடிந்ததும் அன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதில் மிகுந்த சிக்கல் மற்றும் சிரமம் ஏற்படலாம். இதுவரை 40 தொகுதிகளில் 70 முதல் 75 சதவீதம் வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் சித்ரா பவுர்ணமியன்று தேர்தல் நடப்பதால் வாக்குகள் மிகவும் குறைந்த அளவே பதிவாக வாய்ப்பு உள்ளது. எனவே தேர்தல் தேதி மாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது” என்றனர்.

தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சட்ட ரீதியான பரிசீலனை செய்து முன் கூட்டியே இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story