ஆண்டிப்பட்டி அருகே, இடிந்து விழும் அபாயத்தில் தொகுப்பு வீடுகள்


ஆண்டிப்பட்டி அருகே, இடிந்து விழும் அபாயத்தில் தொகுப்பு வீடுகள்
x
தினத்தந்தி 13 March 2019 4:15 AM IST (Updated: 12 March 2019 10:35 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே இடிந்து விழும் அபாயத்தில் தொகுப்பு வீடுகள் உள்ளன.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி ஒன்றியம் ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் லட்சுமிபுரம் காலனி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு, லட்சுமிபுரம் காலனியில் வசிக்கிற 36 குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன.

போதிய பராமரிப்பு இல்லாததால், கடந்த 10 ஆண்டுகளாக கட்டிடங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. இதில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது.

இதற்கிடையே படுமோசமாக வீடுகள் காட்சி அளிப்பதால் அங்கு வசிப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். வாசலிலேயே சமையல் செய்து சாப்பிட்டும், இரவு நேரத்தில் வெளியே படுத்து தூங்கும் அவலநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக தொகுப்பு வீடுகளில் வசிப்போரின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது.

பழுதடைந்த வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை மனு கொடுத்து விட்டனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக எதிரொலிக்கிறது. எனவே உயிர் பலி ஏற்படும் வரை காத்திருக்காமல் தொகுப்பு வீடுகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story