விளைநிலங்கள் வழியாக பெட்ரோல் குழாய்கள் அமைக்க எதிர்ப்பு, விவசாயிகள் நடுகல் நட்டு பொங்கல் வைத்து நூதன போராட்டம்
சென்னிமலை அருகே விளைநிலங்கள் வழியாக பெட்ரோல் குழாய்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடுகல் நட்டு பொங்கல் வைத்து நூதன போராட்டம் நடத்தினார்கள்.
சென்னிமலை,
பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் கோவை இருகூரில் இருந்து பெங்களூர் தேவன்கொந்தி வரை சுமார் 300 கி.மீ தூரத்திற்கு விளை நிலங்கள் வழியாக ஐ.டி.பி.எல் என்ற பெயரில் பெட்ரோல் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பல இடங்களில் விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த குழாய்கள் சென்னிமலை அருகே உள்ள கிராமங்கள் வழியாக கொண்டு செல்லப்படுவதாக வரை படத்தில் உள்ளது. அதனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னிமலை அருகே நேற்று விவசாயிகள் நடுகல் நட்டு அதற்கு பொங்கல் வைத்து நூதன போராட்டம் நடத்தினார்கள்.
முன்னதாக விவசாயிகள் சென்னிமலை அருகே அத்திக்காடு என்ற இடத்தில் காங்கேயம் செல்லும் ரோடு அருகில் நடுகல் நட்டனர். அந்த நடுகல்லை தாண்டி விவசாய நிலங்களில் குழாய்கள் அமைக்க குழி தோண்ட கூடாது என்றும், அந்த நடுகல் தான் விவசாய நிலங்களை காப்பாற்றும் எல்லைக்கல் எனக்கூறி ஏராளமான பெண்கள் அந்த நடு கல்லுக்கு பொங்கல் வைத்தனர். பின்னர் குழாய் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். அதைத்தொடர்ந்து விவசாய நிலங்கள் வழியாக குழாய் திட்டத்தை போடாதே என்ற அறிவிப்பு பலகை திறப்பு மற்றும் இதற்கான இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி தலைவர் தனலட்சுமி பெரியசாமி தலைமை தாங்கினார். தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கி.வே.பொன்னையன் முன்னிலை வகித்தார். இதில், முன்னாள் எம்.பி. அ.கணேசமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.என்.கிட்டுசாமி மற்றும் எஸ்.பொன்னுசாமி, அ.செ.கந்தசாமி உட்பட பலர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
கீழ்கண்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
* கோவை இருகூர் முதல் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்கள் வழியாக பெங்களூரு தேவன்கொந்தி வரை சுமார் 300 கி.மீ தூரத்திற்கு எண்ணெய் குழாய்களை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லாமல் தார்ரோடு ஓரம் கொண்டு செல்லவேண்டும்.
* விவசாயிகளின் விளை நிலங்களை அழிக்கும் இந்த திட்டத்தை கொண்டு வந்த பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களை புறக்கணிப்பது. பாரத் எரிவாயு சிலிண்டரை வேறு நிறுவனங்களுக்கு மாற்றி கொள்வது.
* பெட்ரோலிய குழாய் செல்கிற பாதை முழுவதும் “விவசாய நிலங்களில் நுழையாதே“ என்ற பெயர் பலகைகள் வைப்பது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் விவசாய நிலங்கள் வழியாக கெயில், உயர் மின் கோபுரங்கள் மற்றும் பெட்ரோலிய குழாய்களை கொண்டு செல்லாமல் ரோடு ஓரம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்க வேண்டும்.
என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story