திண்டுக்கல் தம்பதி கொலை வழக்கில் 17 பேரிடம் விசாரணை
திண்டுக்கல்லில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தம்பதியை வெட்டி கொலை செய்த வழக்கில் 17 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் குடைப்பாறைபட்டியை சேர்ந்தவர் திருப்பூர் பாண்டி (வயது 43). இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (40). இவர்களுக்கு சந்திரசேகர், அசோக்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கோவையில் வசித்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் நல்லாம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனைவரும் வந்தனர்.
நேற்று முன்தினம் காலை திருப்பூர் பாண்டி, பஞ்சவர்ணம் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது ஒரு கும்பல் வீட்டின் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. பின்னர் சத்தம் கேட்டு வெளியே வந்த திருப்பூர் பாண்டி, பஞ்சவர்ணம் ஆகியோரை வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் 17 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதில் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து துப்புதுலங்கியது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், குடைப்பாறைபட்டியை சேர்ந்த குமரேசன் கொலைக்கு காரணமான திருப்பூர் பாண்டியின் மகன்களை பழிவாங்க அவருடைய நண்பர்கள் நோட்டமிட்டு வந்தனர். ஆனால், போலீசாரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் திருப்பூர் பாண்டி குடும்பத்துடன் நல்லாம்பட்டிக்கு வந்தார். அதை அறிந்த கும்பல் திருப்பூர் பாண்டியின் குடும்பத்தினரை தீர்த்து கட்ட திட்டமிட்டனர். இதையடுத்து 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ நாளில் நல்லாம்பட்டிக்கு வந்துள்ளனர்.
திருப்பூர் பாண்டியின் குடும்பத்தினரை நிலைகுலைய செய்வதற்காக அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். சத்தம் கேட்டு வெளியே வந்த திருப்பூர் பாண்டி, பஞ்சவர்ணம் ஆகியோரை வெட்டி கொலை செய்தனர். அப்போது அசோக்குமார், சந்திரசேகர் ஆகியோர் வெளியே சென்று விட்டதால் அவர்கள் உயிர் தப்பினர். இதுதொடர்பாக திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது என்றனர்.
Related Tags :
Next Story