அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி


அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 12 March 2019 10:45 PM GMT (Updated: 12 March 2019 8:25 PM GMT)

அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

அன்னவாசல்,

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னரே தற்போது அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் பாட்டில்கள் மூலம் தண்ணீர் வினியோகிப்பது கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர், ஜனவரி மாதத்தில் 3 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்பட்டு வந்த காவிரி குடிநீர் தற்போது வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதுவும் 1 மணி நேரம் மட்டுமே வினியோகிக்கப்படும் குடிநீர் மிக குறைவாக வருவதால் குடிநீருக்காக பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட கேன் குடிநீரை நம்பியே இருக்க வேண்டி உள்ளது. மேலும் குடிநீருக்காக நாள் ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை செலவழிக்க வேண்டி உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தற்சமயம் அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் உள்ள குளங்கள் வறண்டு கிடக்கின்றது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவமழை இயல்பை காட்டிலும் குறைந்த அளவே பெய்தது. அதிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதன் பாதிப்பை கடுமையாக உணர முடிந்தது. குறைவாக பெய்த மழை நீரை ஏரி, குளங்களுக்கு செல்லும் வழித்தடத்தை முறையாக பராமரித்து சேமித்து வைத்திருந்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆழ்குழாய்கள், கிணறுகள் மூலம் கிடைக்கும் நீரை வைத்து கோடைகாலத்தை

சமாளித்திருக்கலாம். குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கடந்த மாதம் பனிப்பொழிவு அதிகமாக உணரப்பட்ட நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்ட தொடங்கியிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள், கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் குடிநீர் தேவைக்காக தனியாரையே சார்ந்துள்ளனர். அன்னவாசல், இலுப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் தண்ணீர் தேவையை 50 சதவீதம் தனியார் தண்ணீர் கேன்களே பூர்த்தி செய்கின்றன. கோடை காலத்தை சமாளிப்பதற்கு உடனடி செயல்திட்டம் வேண்டும். குறிப்பாக மக்களிடம் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தி, நீரின் பயன்பாட்டை எவ்வாறு குறைப்பது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிக முக்கியம்.

நீரின் முக்கியத்துவத்தை உணராமல் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீரை அதிக அளவு செலவு செய்கின்றனர். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.மேலும் மாவட்ட நிர்வாகம் கோடைகாலத்தில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story