மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவு அதிகாரிகள் ஆய்வு


மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவு அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 13 March 2019 4:30 AM IST (Updated: 13 March 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கரூர்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், கரூர் மாவட்டத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்திற்கு ஏற்கனவே 2,458 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,374 கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வசதி கொண்ட 1,319 வாக்குப்பதிவு சரிபார்ப்பு எந்திரங்கள் வரப்பெற்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

சில வாரங்களுக்கு முன்பு கூடுதலாக வரப்பெற்ற 250 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 250 கட்டுப்பாட்டு கருவிகள், 600 வாக்குப்பதிவு சரிபார்ப்பு எந்திரங்கள் ஆகியவை மண்மங்கலம் தாலுகா அலுவலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்தநிலையில் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் பற்றிய முதல் கட்டசரிபார்ப்பு பணி நேற்று நடந்தது. இதில் அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. இதனை மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரியும், தேர்தல் கண்காணிப்பு அதிகாரியுமான கணேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள பொத்தானை அழுத்தி, அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் மாதிரி வாக்குப்பதிவு செய்தனர். பின்னர், தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும் யாருக்கு வாக்களித்தோம் என்கிற தகவல் ரகசியமாக வி.வி.பேட் எந்திரத்தில் மட்டும் தெரிய வருவது பற்றியும் அறிந்து கொண்டனர். பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் தான் வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தலின்போது வாக்குப்பதிவிற்காக வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வின்போது, மண்மங்கலம் தாசில்தார் ரவிக்குமார், துணை தாசில்தார் குமரேசன், வட்ட வழங்கல் அதிகாரி மோகன்ராஜ் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். மேலும் பெங்களூருவில் இருந்து வந்திருந்த என்ஜினீயர் குழுவினர் வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து வாக்காளர்களுக்கு விளக்கம் அளித்தனர். மாதிரி வாக்குப்பதிவு என்பது சில எந்திரங்களின் மூலமே நடத்தப்பட்டது. அந்த பதிவுகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டது. 

Next Story