ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி ஊழியர்களிடம் லஞ்சம் வாங்கிய - விழுப்புரம் தாசில்தார் மீது வழக்குப்பதிவு


ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி ஊழியர்களிடம் லஞ்சம் வாங்கிய - விழுப்புரம் தாசில்தார் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 13 March 2019 4:00 AM IST (Updated: 13 March 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி ஊழியர்களிடம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் தாசில்தார் மீதும், அவருக்கு லஞ்சம் கொடுத்ததாக 4 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் தாலுகா போலீஸ் நிலையத்தின் அருகில் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் புதுச்சேரி உப்பளம் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் (வயது 45).

இவர் தனது நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஆதிதிராவிடர் நல விடுதிகளின் காப்பாளர்களிடம் இருந்து தீபாவளி பண்டிகையின்போது பணம், பரிசு பொருட்களை வாங்குவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 3.11.2018 அன்று விழுப்புரம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அலுவலகத்தில் தனி தாசில்தார் அலெக்சாண்டர் மற்றும் அலுவலக ஊழியர்கள், விடுதி காப்பாளர்கள் என 9 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரையும் அலுவலகத்திற்குள்ளேயே வைத்து கதவுகளை பூட்டி அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் முடிவில் அலுவலகத்தில் இருந்து ரூ.56 ஆயிரத்து 50 சிக்கியது. இந்த பணத்திற்கு தாசில்தார் அலெக்சாண்டர் உரிய கணக்கு காட்டாததால், அதனை போலீசார் கைப்பற்றினர். அதோடு சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் விடுதி ஊழியர்கள் 4 பேர் இந்த பணத்தை, தாசில்தார் அலெக்சாண்டருக்கு லஞ்சமாக கொடுத்தது தெரியவந்தது.

இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக தாசில்தார் அலெக் சாண்டர் மீதும், லஞ்சம் கொடுத்ததற்காக விழுப்புரம் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியின் காப்பாளரான திண்டிவனம் வசந்தபுரத்தை சேர்ந்த மன்னன் (41), வளவனூர் மாணவர் விடுதியின் காப்பாளரான கண்டாச்சிபுரம் தாலுகா ஆ.கூடலூரை சேர்ந்த ஏழுமலை (51), தும்பூர் மாணவர் விடுதியின் சமையலரான சங்கரலிங்கம் (57), விழுப்புரம் மாணவர் விடுதியின் காவலரான நெல்லிக்குப்பம் பெரியசோழவள்ளி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (52) ஆகியோர் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட அலெக்சாண்டர் தற்போது விழுப்புரம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, குற்றம் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அவர்கள் சார்ந்த துறையிடம் அனுமதி பெற்றுத்தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய சென்னை லஞ்ச ஒழிப்பு இயக்குனர் மூலமாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனருக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த அனுமதி கடிதம் தற்போதுதான் வரப்பெற்றது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Next Story