தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை: சேலம், நாமக்கல்லில் ரூ.7 லட்சம் பறிமுதல் சில்வர் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டன


தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை: சேலம், நாமக்கல்லில் ரூ.7 லட்சம் பறிமுதல் சில்வர் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டன
x
தினத்தந்தி 13 March 2019 5:28 AM IST (Updated: 13 March 2019 5:28 AM IST)
t-max-icont-min-icon

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.7 லட்சத்து 83 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சில்வர் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.

சேலம்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக வாகன சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரங்கராஜ் தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதில் சில்வர் பாத்திரங்கள் அடங்கிய அட்டை பெட்டிகள் இருந்தன.

இதையடுத்து வேனில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மேல்பாட்சா பேட்டை பகுதியை சேர்ந்த முகமது ரபீக் என்பதும், சோப்பு வியாபாரி என்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 500 இருந்தது.

இதுகுறித்து போலீசாரிடம் அவர் கூறும் போது, சோப்பு வியாபாரத்துக்காக செவ்வாய்பேட்டைக்கு வருகிறேன் என்றும், வியாபார நிமித்தமாக தான் பணம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். இருந்தாலும் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தையும், ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 246 சில்வர் பாத்திரங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பாத்திரங்களை அதிகாரிகள் உதவி கலெக்டர் செழியனிடம் ஒப்படைத்தனர்.

சேலம் கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் உதவி பொறியாளர் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் காரில் வந்த தர்மபுரி மாவட்டம் எஸ்.கூட்டுரோடு பகுதியை சேர்ந்த அரிசி வியாபாரியான ஹரிகுமார் என்பவரிடம் ரூ.1 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு உரிய ஆவணம் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தலைவாசல் அருகே உள்ள லத்துவாடி பகுதியில் பறக்கும் படை அதிகாரி குணசேகரன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. அப்போது காரில் வந்த பெரம்பலூர் பகுதியை சேர்ந்த மினரல் வாட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் காரல் மார்க்ஸ் என்பவரிடம் ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்து 200 இருந்தது தெரியவந்தது. இதற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கெங்கவல்லி தாசில்தார் சுந்தர்ராஜனிடம் ஒப்படைத்தனர். மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த வாகன சோதனையில் மொத்தம் ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப் பட்டது.

நாமக்கல் அருகே சிவியாம்பாளையம் பகுதியில் பறக்கும்படை அதிகாரி கோபிநாத் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது நாமக்கல்லை நோக்கி வந்த கார் ஒன்றை நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது அதில் ரூ.2 லட்சத்து 62 ஆயிரம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் நாமக்கல் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், சப்-கலெக்டருமான கிராந்தி குமாரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

இது குறித்து காரில் வந்த சிவியாம்பாளையத்தை சேர்ந்த நாவல் ஆனந்த் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அவர் நாமக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், வீட்டில் இருந்து நிதி நிறுவனத்திற்கு பணத்தை கொண்டு செல்வதாகவும் கூறினார். அதற்கான ஆவணத்தை ஒப்படைத்து விட்டு பணத்தை திரும்ப பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மொத்தம் 7 லட்சத்து 83 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story