வேதாரண்யம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு-வாந்தி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு


வேதாரண்யம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு-வாந்தி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 13 March 2019 10:15 PM GMT (Updated: 13 March 2019 7:20 PM GMT)

வேதாரண்யம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப் போக்கு-வாந்தி ஏற்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், அகஸ்தியன்பள்ளி, தகட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள், முதியவர்களுக்கு திடீரென வயிற்றுப்போக்கு- வாந்தி ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உடனே வேதாரண்யம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆய்வு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நடமாடும் மருத்துவ குழுவினர் சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மகேந்திரன், வேதாரண்யம் தாசில்தார் பாலமுருகன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தியாகராஜன், கஸ்தூரி, வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சுகாதார பணிகளை செய்து வருகின்றனர். கொள்ளிடம் கூட்டு குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் தண்ணீரால் வயிற்றுப்போக்கு- வாந்தி ஏற்பட்டதா? என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story