பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் - தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மாணவ, மாணவிகள் போராட்டம் - ஊர்வலம்


பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் - தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மாணவ, மாணவிகள் போராட்டம் - ஊர்வலம்
x
தினத்தந்தி 13 March 2019 10:30 PM GMT (Updated: 13 March 2019 7:41 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து தர்மபுரி, கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம், ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

பொள்ளாச்சியில் மாணவிகள், பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்மபுரி சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று தர்மபுரி கல்லூரி வளாகத்தில் இருந்து டவுன் போலீஸ் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடையவர்களை முறையான விசாரணை மூலம் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவ- மாணவிகள் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.

இதே போல கிருஷ்ணகிரி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் நவீனா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளவரசன் கண்டன உரையாற்றினார்.

இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தூக்கிலிட வேண்டும். தலைமறைவாக உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story