பாலியல் வழக்கில் கைது செய்ய கோரி நாகராஜ் மது பாரை பொதுமக்கள் சூறையாடியதால் பரபரப்பு - ஆபாச வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதால் ஆவேசம்


பாலியல் வழக்கில் கைது செய்ய கோரி நாகராஜ் மது பாரை பொதுமக்கள் சூறையாடியதால் பரபரப்பு - ஆபாச வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதால் ஆவேசம்
x
தினத்தந்தி 13 March 2019 11:15 PM GMT (Updated: 13 March 2019 7:41 PM GMT)

பாலியல் வழக்கில் நாகராஜை கைது செய்ய கோரி மது பாரை பொதுமக்கள் சூறையாடினர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதாக சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீசில் புகார் அளித்த மாணவியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பொள்ளாச்சி நகர 34-வது வார்டு அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளர் பார் நாகராஜ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 4 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கிடையில் பார் நாகராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் பொள்ளாச்சி- கோட்டூர் ரோடு ஓம்பிரகாஷ் தியேட்டர் அருகே நாகராஜ் நடத்தி வந்த மதுக்கடை பாரை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் பாருக்குள் புகுந்து, அங்கு மதுஅருந்தி கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டியதுடன் மேஜை, நாற்காலிகளை தூக்கி பாரை சூறையாடினர். மேலும், அங்கிருந்த பீர் பாட்டில்கள், காலி பாட்டில்கள், குளிர்சாதன பெட்டி, கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை உடைத்தனர்.

பின்னர் வெளியே வந்த பொதுமக்கள் அங்கு நின்ற மதுபிரியர்களை விரட்டியடித்து பாரை இழுத்து மூடினர். இதை பார்த்த டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு ஓட்டம் பிடித்தனர். அதை தொடர்ந்து பொதுமக்கள் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள், பார் நாகராஜ் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. எனவே பார் நாகராஜை வழக்கில் சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.பின்னர் அவர்கள் கூறும்போது, நாகராஜுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கிறது. அவர் கட்சி பிரமுகர் என்பதால் அவரை வழக்கிலிருந்து விடுவித்து பேருக்கு ஏதோ வழக்கு போட்டு ஜாமீனில் விட்டு இருக்கிறார்கள். அவரை உடனே வழக்கில் சேர்க்க வேண்டும் என்றனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பொள்ளாச்சியில் உள்ள மதுக்கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story