சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல், வனத்துறை ஊழியர் உள்பட 2 பேர் பலி


சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல், வனத்துறை ஊழியர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 13 March 2019 10:30 PM GMT (Updated: 13 March 2019 7:41 PM GMT)

சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வனத்துறை ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

கூடலூர்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி ரோசாப்பூ கண்டம் பகுதியை சோந்தவர் சரத்குமார் (வயது 22). இவர், கேரள வனத்துறையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஷாஜூதீன் (22). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு குமுளியில் இருந்து கம்பத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பின்னர் அவர்கள், கம்பத்தில் இருந்து குமுளி நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சரத்குமார் ஓட்டினார். பின்னால் ஷாஜூதீன் அமர்ந்திருந்தார். குமுளி தேசிய நெடுஞ்சாலையில், கூடலூரை அடுத்த பகவதி அம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.

அப்போது, சாலையோரத்தில் நிறுத்தியிருந்த சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த சரத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தலையில் பலத்த காயத்துடன் ஷாஜூதீன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே ஷாஜூதீன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லோயர்கேம்ப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story