அமெரிக்கா படைப்புழுவால் மக்காச்சோளத்தில் பாதிப்பு: இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


அமெரிக்கா படைப்புழுவால் மக்காச்சோளத்தில் பாதிப்பு: இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 14 March 2019 4:36 AM IST (Updated: 14 March 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்கா படைப்புழுவால் மக்காச்சோளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டவர்களில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்று திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனரை சந்திக்க வந்தனர். அங்கு அவர் இல்லாததால் அதிகாரியிடம் தங்கள் கோரிக்கையை தெரிவித்துவிட்டு தான் செல்வோம் என்று வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளத்தில் அமெரிக்கா படைப்புழு என்ற புழுவின் மூலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் தங்கள் பயிரிட்டுள்ள மக்காச்சோளத்திற்கும் காப்பீடு செய்துள்ளனர். அந்த காப்பீடு தொகையையும் பெற்றுத்தர வேண்டும். மேலும் போலி விதைகளை விற்பனை செய்த நிலையங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இதனையடுத்து வேளாண்மை துறை அதிகாரிகள் அங்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்காச்சோளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் காலை 10 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை நடந்தது. இதனால் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story