சேலம், நாமக்கல்லில் 15 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.8 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை


சேலம், நாமக்கல்லில் 15 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.8 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 13 March 2019 9:30 PM GMT (Updated: 13 March 2019 11:12 PM GMT)

சேலம், நாமக்கல்லில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 15 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.8¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் சேலம் மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக வாகன சோதனை நடைபெற்றது.

தேர்தல் பறக்கும் படை அதிகாரி குமரேசன் தலைமையில் குழுவினர் நேற்று அதிகாலை ஓமலூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு பஸ்சை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் பறக்கும் படையினர் சொகுசு பஸ்சில் ஏறி பயணிகளிடம் சோதனை நடத்தினர். அதில் ஒருவர் வைத்து இருந்த பையை சோதனை செய்தனர். அதில் ஏராளமான வெள்ளி கொலுசு, மோதிரம் உள்ளிட்ட வெள்ளிப் பொருட்கள் இருப்பது தெரிந்தது. அவரிடம் விசாரித்த போது அவர் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தை சேர்ந்த விஜயசிங் (வயது 30) என்றும், வெள்ளி வியாபாரி என்றும் கூறினார்.

வெள்ளிப்பொருட்களை பெங்களூருவில் உள்ள ஒரு கடையில் விலைக்கு வாங்கி அதை கேரளாவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறினார். அப்போது அதிகாரிகள் இவற்றுக்கான உரிய ஆவணங்களை கேட்டனர். ஆனால் அவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையொட்டி அவரிடம் இருந்து மொத்தம் 15 கிலோ வெள்ளிப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதே போன்று தலைவாசல் அருகே உள்ள மும்முடி சுங்கச்சாவடியில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி, காரை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தனர்.

அவர் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் பிரபாகரன் (51) என்று தெரிந்தது. பின்னர் அவரது பையை சோதனை செய்த போது, அதில் ரூ.3 லட்சத்து 24 ஆயிரம் இருப்பதும், அதற்கு உரிய ஆவணம் இல்லை என்பதும் தெரிந்தது. இதையொட்டி ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

ஓமலூரை அடுத்த ஜோடுகுளி என்ற இடத்தில் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் பிரகாஷ் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் காரில் ரூ.3 லட்சம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து காரில் வந்த காங்கேயம் பகுதியை சேர்ந்த அன்னக்கொடி என்பவரிடம் விசாரித்தனர். அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அதனை ஓமலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் உதவி அதிகாரி சரவணனிடம் ஒப்படைத்தனர்.

இதே போல நாமக்கல் - துறையூர் சாலையில் பட்டறைமேடு பகுதியில் நேற்று பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துறையூர் பகுதியில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கொண்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் நாமக்கல் சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், சப்-கலெக்டருமான கிராந்தி குமாரிடம் ஒப்படைக்கப் பட்டது.

இது தொடர்பாக காரில் பயணம் செய்த பெரம்பலூர் கூத்தனூரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்தபோது, லாரி அதிபரான அவர், தனது லாரியை பழுது நீக்கம் செய்வதற்காக நாமக்கல்லில் உள்ள பட்டறை ஒன்றில் நிறுத்தி இருப்பதும், லாரி என்ஜின் வேலையை முடித்து கொண்டு செல்ல ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை கொண்டு வந்து இருப்பதும் தெரியவந்தது. அதற்கு உரிய ஆவணங்களை காண்பித்து, பணத்தை திரும்பி பெற்று செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

பரமத்தி வேலூரை அடுத்த பிலிக்கல்பாளையம் பகுதியில் நேற்று காலை பறக்கும் படை அதிகாரி கருணாநிதி தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கரூரில் இருந்து பிலிக்கல்பாளையம் நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த கரூர் மாவட்டம் வாங்கல் பாளையத்தை சேர்ந்த செல்வம் என்பவரிடம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் இருந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பள்ளிபாளையம் அருகே உள்ள மொளசி வக்கீல் தோட்டம் பகுதியை சேர்ந்த சிலர் ஒரு காரில் திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். மொளசி அருகே தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் அந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. அதற்குரிய ஆவணங்களும் அவர்கள் வைத்திருந்தனர். இதையடுத்து அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து பணத்துடன் காரை அனுப்பி வைத்தனர். சேலம், நாமக்கல்லில் நேற்று நடந்த சோதனையில் 15 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.8¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story