மூதாட்டியிடம் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கைவரிசை


மூதாட்டியிடம் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கைவரிசை
x
தினத்தந்தி 15 March 2019 3:45 AM IST (Updated: 14 March 2019 8:21 PM IST)
t-max-icont-min-icon

அகஸ்தீஸ்வரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து, மூதாட்டியிடம் 1½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தென்தாமரைகுளம்,

அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சமாதானபுரத்தை சேர்ந்த தங்கசாமி மனைவி ஞானம் (வயது 65). இவர் கடைக்கு செல்வதற்காக சமாதானபுரம் ஆலயம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால், ஹெல்மெட் அணிந்தவாறு ஒரு மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அந்த நபர் திடீரென ஞானத்தை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 1½ பவுன் சங்கிலியை பறித்தார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த ஞானம், ‘திருடன்... திருடன்...’ என்று சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்று விட்டார். இதுகுறித்து ஞானம் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

சமாதானபுரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிக்கப்பட்டது. சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் கடைக்கு சென்ற பெண்ணை தாக்கி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது. கடந்த வாரம் முகிலன்குடியிருப்பு பகுதியில் சைக்கிளில் டியூ‌ஷனுக்கு சென்ற மாணவியை தாக்கி கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.

இதுபோன்ற நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சாலையில் நடந்து செல்ல பெண்கள் அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story