மண்ணிவாக்கத்தில் தி.மு.க. நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு


மண்ணிவாக்கத்தில் தி.மு.க. நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 15 March 2019 4:45 AM IST (Updated: 14 March 2019 10:25 PM IST)
t-max-icont-min-icon

மண்ணிவாக்கத்தில் தி.மு.க. நிர்வாகியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் எம்.டி.லோகநாதன் (வயது 58). மண்ணிவாக்கம் ஊராட்சித்தலைவராக இருந்தவர். தற்போது மண்ணிவாக்கம் 9-வது வார்டு தி.மு.க. செயலாளராக உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் இவரது அண்ணன் எம்.டி.சண்முகம் (62) வசித்து வருகிறார். இவர் மண்ணிவாக்கம் தி.மு.க. ஊராட்சி செயலாளராக உள்ளார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

நள்ளிரவு நேரத்தில் வீட்டில் இருந்த நாய் தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்தது. இருவரும் எழுந்து வெளியே வந்து பார்த்தபோது, வீட்டில் நிறுத்தி இருந்த கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

உடனே தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள காரின் பின்பகுதி எரிந்து நாசமானது. பின்னர் கார் நிறுத்தப்பட்ட இடத்தை பார்த்தபோது, மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீட்டின் மீது வீசி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து இருவரும் ஓட்டேரி போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் முன்னாள் ஊராட்சித்தலைவரிடம் நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினர்.

பின்னர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஓட்டேரி போலீசார் ஆய்வு செய்தபோது, 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரும் உள்ளாட்சித்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடாது என்று அச்சுறுத்துவதற்காக பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். தனிப்படை போலீசார் மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. மற்றும் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள் உள்பட பலர் லோகநாதன், சண்முகம் வீட்டிற்கு நேரில் வந்து நடந்த சம்பவத்தை பற்றி கேட்டறிந்தனர்.

Next Story