தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 50,056 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 50,056 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்
x
தினத்தந்தி 14 March 2019 11:00 PM GMT (Updated: 14 March 2019 7:04 PM GMT)

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 50,056 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

கிருஷ்ணகிரி,

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று தொடங்கியது. இதன்படி நேற்று நடந்த தமிழ் முதல்தாள் தேர்வை எழுத தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 22,997 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 22,512 பேர் தமிழ் முதல்தாள் தேர்வை எழுதினார்கள். 485 பேர் இந்த தேர்வை எழுத வரவில்லை.

தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக மொத்தம் 89 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு அறை கண்காணிப்பாளர், வினாத்தாள் கட்டு கண்காணிப்பாளர்கள் என 1,500 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதேபோல் 282 பேர் அடங்கிய பறக்கும் படை குழுக்கள் மூலம் தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி மேற்பார்வையில் கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படை குழுவினர் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். தேர்வில் முறைகேடுகளை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, மத்தூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் மொத்தம் உள்ள 88 மையங்களில் 26 ஆயிரத்து 867 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். அத்துடன் தனித்தேர்வர்கள் 677 பேர் தேர்வு எழுதினார்கள்.

இதற்காக முதன்மை கண்காணிப்பாளர்களாக 88 பேரும், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாக 11 பேரும், துறை அலுவலர்களாக 88 பேரும், கூடுதல் துறை அலுவலர்களாக 16 பேரும், வழித்தட அலுவலர்களாக 25 பேரும், அறைக் கண்காணிப்பாளர்களாக 1,540 பேரும், பறக்கும் படை, நிலையான படை உறுப்பினர்களாக 136 பேரும், வினாத்தாள் கட்டுக் காப்பாளர்களாக 8 பேரும் என 1,912 பேர் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். அத்துடன் ஒவ்வொரு மையத்திலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி செய்திருந்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மொத்தம் 50,056 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

Next Story