சேலம் மாவட்டத்தில் 152 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 45,508 மாணவ, மாணவிகள் எழுதினர்


சேலம் மாவட்டத்தில் 152 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 45,508 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 15 March 2019 4:00 AM IST (Updated: 15 March 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று 152 மையங்களில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 45 ஆயிரத்து 508 மாணவ, மாணவிகள் எழுதினர்.

சேலம்,

தமிழகம் முழுவதும் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 23 ஆயிரத்து 544 மாணவர்கள், 22 ஆயிரத்து 925 மாணவிகள் என மொத்தம் 46 ஆயிரத்து 469 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இவர்களில் 683 மாணவர்களும், 278 மாணவிகளும் என மொத்தம் 961 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதனால் 45 ஆயிரத்து 508 மாணவ-மாணவிகள் மட்டும் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் முதல்தாள் தேர்வை எழுதினர். இதற்காக மாவட்டம் முழுவதும் 152 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தனித்தேர்வர்கள் சிலரும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர். தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் விதமாகவும், அவ்வாறு செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காகவும் 180 பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தன. இவர்கள் மாவட்டம் முழுவதும் தேர்வு மையங்களை தீவிரமாக கண்காணித்தனர்.

வழக்கமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு காலையில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் அறிவிக்கப்பட்டு அந்த தேர்வுகள் காலையில் நடைபெற்று வருகிறது. இதனால், எஸ்.எஸ்.எல்.சி. மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலம் தேர்வுகள் மட்டும் மதியம் நடக்கும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று மதியம் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மதியம் 2 மணிக்கு மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 2.15 மணி வரை விடைத்தாளில் மாணவர்களின் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்தனர். மதியம் 2.15 மணி முதல் மாலை 4.45 மணி வரை தேர்வு நடைபெற்றது.

தேர்வையொட்டி மாணவ, மாணவிகள் பலர் மதியம் 1 மணியில் இருந்தே அந்தந்த தேர்வு மையத்திற்கு வரத்தொடங்கினர். பலர் பெற்றோரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். மேலும் பல மாணவ, மாணவிகள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அதிக மதிப்பெண் பெற கடவுளை வேண்டிக்கொண்டனர். தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஒரு சில பள்ளிகளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி, சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

Next Story