திருச்சி அருகே வாகன சோதனையில் ரூ.8¾ கோடி காசோலைகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை


திருச்சி அருகே வாகன சோதனையில் ரூ.8¾ கோடி காசோலைகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 March 2019 10:15 PM GMT (Updated: 14 March 2019 9:38 PM GMT)

திருச்சி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் மொத்தம் ரூ.8¾ கோடி காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி,

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பறக்கும் படை அதிகாரிகள் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் மாவட்ட மற்றும் நகர எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் திருச்சி-கரூர் மெயின்ரோட்டில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பராய்த்துறை டோல்கேட்டில் நேற்று தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி தாசில்தார் சுமதி தலைமையிலான பறக்கும் படையினர் அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது ஒரு காரில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் இருந்தனர். கண்ணன் (வயது29), மணி (28), பேச்சிமுத்து (20) என்ற அந்த நபர்கள் ரூ.8¾ கோடி மதிப்புள்ள 192 காசோலைகளையும், ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 2 கடன் உறுதி பத்திரங்களையும் (புரொநோட்) வைத்து இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

இந்த காசோலைகள் மற்றும் கடன் பத்திரங்கள் ஆகியவற்றை அவர்கள் கொண்டு வந்ததற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை, உரிய ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை. இதனை தொடர்ந்து அந்த 192 காசோலைகள் மற்றும் 2 கடன் உறுதி பத்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஸ்ரீரங்கம் தாசில்தார் கனகமாணிக்கத்திடம் ஒப்படைத்தனர். 

Next Story