பவானி அருகே கார் மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற தந்தை, மகன் பரிதாப சாவு


பவானி அருகே கார் மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற தந்தை, மகன் பரிதாப சாவு
x
தினத்தந்தி 14 March 2019 10:45 PM GMT (Updated: 14 March 2019 11:04 PM GMT)

பவானி அருகே நடந்த விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர். பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சித்தோடு அருகே உள்ள செல்லப்பம்பாளையம் மேட்டுக்காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் என்கிற தனபால் (வயது 27). இவருடைய மனைவி பிரியா (25). இவர்களுக்கு காவ்யா (7) என்ற மகளும், சபரி (5) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சித்தோட்டில் உள்ள கோவில் விழாவுக்கு தங்கராஜும், அவருடைய மகன் சபரியும் மோட்டார்சைக்கிளில் சென்றனர். பின்னர் இரவு 10 மணி அளவில் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அங்குள்ள ரோட்டை தங்கராஜ் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தங்கராஜும், சபரியும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

விபத்து பற்றிய செய்தி அந்த பகுதியில் வேகமாக பரவியது. தகவல் பரவியதும், அந்த பகுதியை சேர்ந்த தங்கராஜின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தனர். அவர்கள் அங்கு இறந்து கிடந்த தங்கராஜ் மற்றும் சபரியின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் அவர்கள் அனைவரும், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி அறிந்ததும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ், இன்ஸ்பெக்டர்கள் கதிர்வேல் (சித்தோடு), தேவேந்திரன் (பவானி) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர். மேலும் வாகனங்களை மாற்றுப்பாதையில் போலீசார் திருப்பி விட்டனர். ஆனால் 2 பேரின் உடல்களையும் எடுக்க மறுத்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இங்கு விபத்து ஏற்படாமல் தடுக்க சர்வீஸ் ரோடும், மேம்பாலமும் அமைக்க வேண்டும்,’ என கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்து போலீசார் கூறுகையில், ‘இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து தங்களுடைய போராட்டத்தை 12.15 மணி அளவில் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 2¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story