நீலகிரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் உண்ணாவிரதம்
நீலகிரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னூர்,
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்கள் மட்டுமின்றி ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை குன்னூரில் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம், ஊட்டியில் கோட்ட அலுவலகம், கூடலூர் மற்றும் கோத்தகிரியில் உதவி பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் ஒப்பந்த ஊழியர்களாக 120 பேர் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் நீலகிரியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் 3 மாத சம்பள நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு மற்றும் வருங்கால வைப்பு நிதியை முறைப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஊட்டி கோட்ட அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் பசுபதி, கிளை செயலாளர் சுமித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊட்டி மற்றும் குந்தா தாலுகாவில் பணிபுரியும் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோன்று குன்னூரில் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்க கிளைத்தலைவர் மகாலிங்கம், ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளைத்தலைவர் லியோ கிறிஸ்டோபர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜேக்கப் மோரிஸ் மற்றும் நிர்வாகிகள் கென்னடி, ரவி மனோஜ், கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூடலூரில் உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் சங்க தலைவர் கிருஷ்ணக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் பி.எஸ்.என்.எல். அலுவலர் சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் அருள்செல்வன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்தது. இதனால் அலுவலக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறியதாவது:-
மத்திய அரசு பி.எஸ்.என்.எல். பொதுத்துறை நிறுவனத்தை முடக்கும் வகையில் செயல்படுகிறது. இதனால் பொருளாதார ரீதியாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. மேலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சம்பளம் வழங்கவில்லை எனில் தொடர் போராட்டம் நடத்தவும் ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story