நடத்தையில் சந்தேகம், பலமுறை கண்டித்தும் திருந்தாததால் கொலை செய்தேன் - தாயை கொன்ற வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
ஆண்களுடன் பழகுவதை பலமுறை கண்டித்தும் திருந்தாததால் தாயை கொலை செய்ததாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 20-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசேகர உடையார். இவரது மனைவி ஜெயமேரி(வயது 51). இவர்களது மகன் அமலோற்பவநாதன் (28). இவர் கடந்த 12-ந் தேதி தனது தாயாரை கொலை செய்து விட்டதாக போலீசில் சரண் அடைந்தார்.
இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலோற்பவநாதனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
எனது தாயார் மீது நான் மிகுந்த பாசம் வைத்திருந்தேன். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மணவாளன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் என் தாயை பிரிந்து தனிமையில் அவதிப்பட்டு வந்தேன். பல்வேறு முயற்சிகள் எடுத்து எனது தாயை ஜாமீனில் வெளியே எடுத்தேன். தொடர்ந்து முத்தியால்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து எனது தாயாருடன் தங்கி இருந்தேன். எனது செலவிற்காக அவர் மாதந்தோறும் பணம் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவரது நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை அடிக்கடி கண்டித்தேன். இருப்பினும் அவர் மீண்டும் மீண்டும் தவறு செய்து வந்தார்.
கடந்த 5-ந் தேதி நான் அதிகாலை 4 மணியளவில் கண் விழித்தேன். அப்போது அவரது அறையில் மின்விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. மேலும் அவர் பேசிக்கொண்டு இருந்த சத்தம் கேட்டது. உடனே நான் அவரது அறைக்கு சென்று பார்த்தேன். அப்போது அவர் அறைகுறை ஆடையுடன் யாருடனோ செல்போனில் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் எனக்கு ஆத்திரம் வந்தது. உடனே நான் அவரை கண்டித்தேன்.
எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் அங்கு கிடந்த நாற்காலியை எடுத்து அவரை தாக்கினேன். இதில் மயங்கி விழுந்தார். உடனே சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து அவரின் கழுத்தை வெட்டி கொலை செய்தேன். பின்னர் அறையை மூடிவிட்டு வெளியே வந்து விட்டேன்.
அவரது செல்போனை எடுத்து அருகில் உள்ள குட்டையில் வீசி விட்டேன். பின்னர் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்தேன். ஆனால் அதற்கான தைரியம் வராததால் தினம் தினம் வீட்டில் தனியாக கதறி அழுதேன். இந்த நிலையில் எனது தாயாரின் பிணத்தை அடைத்து வைத்திருந்த அறையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. உடனே நான் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தேன். போலீசார் என்னை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அமலோற்பவநாதன் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story